புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மோதல் குறித்து, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.அதன்படி, விக்ரம் மிஸ்ரி இன்று விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்தர் ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாஜகவின் அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் எப்போதும்போல வழக்கமான களத்தில்தான் நடந்தது. அண்டை நாட்டிலிருந்து அணு ஆயுதப் பயன்பாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு என்பது இரு தரப்பு மட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த மோதலில் சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்றால், பாகிஸ்தான் விமானத் தளங்களை இந்தியா தாக்கியதால் அது ஒரு பொருட்டல்ல” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானில் இயங்கி வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும், பொது மக்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த ராணுவ மோதல், கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ தொலைபேசி மூலம் விடுத்த கோரிக்கையை இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த மோதல் நின்றது என்று மத்திய அரசு தெரிவித்தது. இது குறித்து வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேரில் விளக்கம் அளிப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.