திருப்பூர்: திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸார் இருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த இந்த காவலர்கள் இருவரும் சகோதரர்கள். பணி நேரத்தில் சீருடையுடன் சென்று தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியதால், இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.