பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சைபுல்லா, பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை பிரிவான டிஆர்எப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இதன்படி கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சூழலில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா மூத்த தலைவர் அபு சைபுல்லா பாகிஸ்தானின் சிந்து மாகாணம், மாட்லி பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
இவர் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபட்டு வந்தார். தனது பெயரை வினோத் குமார் என்று மாற்றி நேபாளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது காரில் வந்த 3 தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் துரிதமாக செயல்பட்ட 3 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு அபு சைபுல்லா மூளையாக செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது லஷ்கர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியிலும் அபு சைபுல்லா இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னணியிலும் அபு சைபுல்லா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை இந்திய உளவுத் துறை அதிகாரிகள் அதிதீவிரமாக தேடி வந்தனர்.
இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணம், மாட்லி பகுதியில் பதுங்கி இருந்து அபு சைபுல்லாவை மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் லஷ்கர் தீவிரவாதிகள் மட்டுமன்றி பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.