பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.
இதில், பெங்களூருவின் ஹோரமாவு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். மழைநீர் தேங்கியதில் சாக்கடை செல்லும் வழிகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. இதனால், அரையடி உயரத்திற்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பகுதியளவு மூழ்கின.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்தியில் தமிழகம், கர்நாடகாவின் சில பகுதிகளில் பிற்பகல் (நேற்று) 3 மணியில் இருந்து அதிகாலை 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவித்து இருந்தது. பெங்களூருவில் மழையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி நேற்று முன்தினம் கைவிடப்பட்டு இருந்தது.
இதுபோன்ற சூழலில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று மாலை 4 மணியளவில் மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்கிறார். அவர் பெங்களூரு நகரை ஆய்வு செய்வதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கவனத்துடன் கேட்டறிகிறார். அவருடன் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
பெங்களூரு நகரில் நேற்றிரவு முழுவதும் மழை பெய்ததில் நகர் முழுவதும் பல்வேறு சாலைகளில், வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது என முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்து உள்ளது.