சென்னை: இலங்கை முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2009-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது. இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மே 17 இயக்கம் சார்பில் பெசன்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையிலும், கோவை கொடிசியா மைதானத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்துக்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்” என்று தெரிவித்துள்ளார்.