ஆசியாவில் கரோனா அலை: பொது இடங்களில் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை

சென்னை: ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ள நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மே 12-ம் தேதியிலிருந்து 164 பேர் கரோனா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், தமிழகத்தில் 34 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக சுகாதார நிறுவனத்தால் கடந்த 2020-ம் ஆண்டு பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கரோனா வைரஸ் தொற்று, உலக அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. ஆனாலும், தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

நடப்பாண்டில் கரோனா பரவல் மிக குறைந்த அளவே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் இல்லை. இந்தியாவில் நடப்பாண்டில் கரோனா தொற்றால் எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலமாக கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனா பரவல் மிக குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விரீயம் இழந்த ஓமைக்கரான் வகை வைரஸின் உட்பிரிவுகளான ஜெஎன்1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய வைரஸ் பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலும் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.

ஆனாலும், பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுவடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்தல் வேண்டும். அறிகுறிகள் உள்ளவர்களும், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சார்ந்த இணைநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.