சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காந்தி நகர் பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இங்கு நேரத்தை செலவிடுவர். குழந்தைகள், பெரியோர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் பிடித்த இடமாக இந்த பூங்கா உள்ளது. ஆத்தூரின் குறிப்பிடத்தக்க ஓர் அடையாளமாகவே இது விளங்குகிறது. எனினும் சமீப காலமாக சரியான பராமரிப்பின்றி மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது.
எனவே இது குறித்து பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் சிலரிடம் பேசியபோது, “பல மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் மாலை நேரங்களில் பூங்காவின் பல இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கேயே குழந்தைகள் விளையாடவும் செய்கின்றனர். மரங்களும் செடிகளும் சூழ்ந்த பகுதி என்பதால் விஷ பூச்சிகள் தாக்கும் அபாயமும் உள்ளது. பூங்காவில் காணப்படும் பல நாற்காலிகள் உடைந்த நிலையில் உள்ளன. அதில் இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன.

அதுவும் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் சில விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து ஓட்டை விழுந்து இருப்பதால், விளையாடும்போது உடலை கிழிக்க நேரும் அபாயம் உள்ளது. பூங்காவுக்கென அமைக்கப்பட்ட அலங்கார தண்ணீர் தொட்டிகளும் செயல்பாட்டில் இல்லை. அதில் உள்ள மோட்டார்களும் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன. குழந்தைகள் பூங்காவுக்குச் செல்ல ஆசைப்படுகின்றனர். ஆனால் பூங்கா இந்நிலையில் இருப்பதால், அழைத்து வர எங்களுக்கு சற்று தயக்கமாக உள்ளது” என பெரும்பாலானோர் கூறினர்.
எனவே இது தொடர்பாக காந்தி நகர் பகுதிக்கான நகராட்சி கவுன்சிலர் ஐஸ்வர்யா கோபியிடம் பேசியபோது, “எங்கள் தரப்பில் நாங்கள் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம். நகராட்சி மூலமாக பலமுறை நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம். இந்த மாதமே பூங்காவுக்கென 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளனர். இனிவரும் காலங்களிலேயே நடைமுறைகள் முடிவு பெற்று நிதி வந்து சேரும். அதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் தேவைப்படக்கூடும். எனவே இரண்டு மாத கலங்களில் பூங்கா மறு சீரமைப்பு பணிகளும் பராமரிப்பு பணிகளும் நிச்சயம் துவங்கும்

தினமும் வார்டுக்காக பல முன்னெடுப்புகளை செய்து கொண்டேதான் இருக்கிறோம். நாங்கள் உழைப்பை அதிகமாகவே கொடுக்கின்றோம். ஆனால் அரசாங்கத்தில் ஒரு விஷயம் முடிவு பெற பல நடைமுறைகள் உள்ளன . சென்னையிலிருந்து சேலத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின் சேலத்திலிருந்து ஆத்தூருக்கு வரவேண்டும். இது போன்ற பல படிநிலைகளை தாண்டியே நிதி வந்து சேரும். எனவே அதற்கான காலம் தேவைப்படுகிறது. இதைத் தாண்டி நவீன முறையில் பூங்காவை சீரமைக்க நாங்கள் எங்கள் தரப்பில் பல புதிய திட்டங்களை அதிகாரிகளிடம் முன் வைத்தோம். அதன்படி ஒரு கோடி ரூபாய் நிதி கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் அதை ஆய்வு செய்த பின் அரசாங்கத்தின் விதிமுறைப்படி 55 லட்சமே நிதி ஒதுக்க முடியும் என்று தற்போதே ஒதுக்கி உள்ளனர்.
இந்த புதிய திட்டங்கள் சார்ந்த விவாதமே ஓராண்டு காலமாக நடைபெற்றது. எங்கள் தரப்பிலிருந்து புதிய திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி கேட்டு மிகவும் தாழ்மையுடன் பலமுறை அனுமதி கோரினோம். எனினும் மறுசீரமைப்பு பணிகளுக்காக இவ்வளவு நிதிதான் ஒதுக்க இயலும் என தெரிவித்திருந்தனர். பல முயற்சிகளுக்கு பின்பு வெற்றிகரமாக 55 லட்சம் நிதியை ஒதுக்கி உள்ளனர். எனவே அதை ஏற்றுக் கொண்டு, நிதி எங்கள் தரப்பிற்கு வந்தவுடன் உடனடியாக பணிகளை நிச்சயம் தொடங்கவிருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் புதிதாக வரும் திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், “புதிதாக நடைபாதைகள், மின்விளக்குகள், இருக்கைகள் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான சித்திரங்கள், புதிய சுற்றுச்சுவர், அறிவுபூர்வமான விளையாட்டுகள், உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் போன்ற பல விஷயங்களை மக்கள் பயன்பெறும் வகையில் யோசித்து செயல்படுத்த உள்ளோம். கட்டணமில்லாமல் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் பூங்கா இது. மேலும் மக்களின் ஆதரவு இதற்கு இருக்க வேண்டும். நல்ல முறையில் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.” என்றார்.