திருவனந்தபுரம்,
கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கம், பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற 3 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில், அவர்கள் அணிந்திருந்த பிரத்யேக உள்ளாடைகளுக்குள் இருந்து கடத்தி வந்த ரூ.70 லட்சம் ரொக்கப் பணம், 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சாகர், மணிகண்டன் மற்றும் சந்தீப் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர்? எங்கு இருந்து எங்கு கொண்டு செல்ல முயன்றார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.