நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாகவே விளையாடி வந்தது. விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று டாப் 4 அணிகளில் இருந்துக்கொண்டு வந்தது. ஆனால் தொடரின் பாதிக்கு பிறகு இது அனைத்தும் தலைகீழாக மாறியது. அடுத்த 6 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்து, தற்போது தொடரில் இருந்து எலிமினேட் ஆகி உள்ளது.
இதற்கு அந்த அணியில் இருக்கும் ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களின் மோசமான செயல்பாடே காரணம். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டே சிறப்பாக செயல்படவில்லை. 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் காரணமாக அவர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆனால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மிக மோசமாக செயல்பட்டார். பேட்டிங்கிலும் சரி கேப்டன்சியிலும் சரி, இரண்டிலுமே சரியான பங்களிப்பை அவரால் கொடுக்க முடியவில்லை. அதேசமயம் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஆலோசகர் ஜாகிர் கான் மற்றும் ரிஷப் பண்ட் இவர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லை என கூறப்படுகிறது. இதுவே அந்த அணியின் தோல்விகளுக்கு காரணமாகவும் கூறப்படுகிறது.
மேலும், ரிஷப் பண்ட்டின் மோசமான செயல்பட்டால், அந்த அணியின் உரிமையாளர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவரை இந்த ஆண்டுடன் வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு மோசமான சாதனையை படைக்க இருக்கிறார்.
ரிஷப் பண்ட் 12 போட்டிகளில் வெறும் 135 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் சராசரி 12.27 ஆகும். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு கேப்டனின் இரண்டாவது மோசமான சராசரியாகும். இந்த பட்டியலில் இயோன் மோர்கன் முதல் இடத்தில் இருக்கிறார். 2021ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக அவர் செய்த மோசமான சாதனை ஆகும். அந்த ஆண்டில் அவரது சராசரி 11.08ஆக இருந்தது.
வெளிநாட்டு வீரர்களுடன் ஒப்பிடுகையில் இந்த மோசமான சாதனையில் ரிஷப் பண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதுவே இந்திய கேப்டன்களில் எடுத்துக்கொண்டால் ரிஷப் பண்ட் தான் முதல் இடம். ரிஷப் பண்ட் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இன்னும் 9 ரன்கள் எடுத்தால், இயோன் மோர்கனை விட மோசமான சராசரியை கொண்டிருப்பதை தவிர்க்க முடியும்.
மேலும் படிங்க: இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? – இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!
மேலும் படிங்க: IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!