பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் நடத்தும் அவர் பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததோடு, பாகிஸ்தானுக்கும் மூன்று முறை சென்று வந்ததாகவும் கைது செய்தபின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை ஹரீஷ் மல்ஹோத்ரா இது குறித்து அளித்த பேட்டியில்,”என் மகள் டெல்லி செல்வதாகச் சொல்லிவிட்டுதான் சென்றார். அவர் எங்களிடம் எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது. ஜோதி வீட்டில் வீடியோ தயாரிப்பார். எங்கள் மகள் பாகிஸ்தானுக்கு சென்றது எங்களுக்கு தெரியாது”என்று தெரிவித்தார். ஆனால் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டவுடன் அவரது தந்தை ஹரீஷ் அளித்த பேட்டியில், “ தனது மகள் வீடியோ எடுக்கத்தான் பாகிஸ்தான் சென்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இப்போது தன் மகள் பாகிஸ்தான் சென்றது தனக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜோதி மல்ஹோத்ரா தனது யூடியூப் சேனலில் 450க்கும் அதிகமான வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் பாகிஸ்தானில் இந்திய பெண், பாகிஸ்தான் சொகுசு பஸ்சில் இந்தியப் பெண் என தலைப்பிட்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதோடு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளார். இப்பயணத்திற்கும், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.