கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.
போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்து பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார். இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, ரஷிய தரப்பு கொள்கைகளை பற்றி எனக்கு தெரியாது. டிரம்புடனான எங்களுடைய பேச்சுவார்த்தையின் வழியே நான் புரிந்து கொண்ட விசயம் என்னவென்றால், ரஷிய தரப்பு எங்களுக்கு குறிப்பு ஒன்றை அனுப்ப விரும்புகிறது என தெரிகிறது.
போர் நிறுத்தம் மட்டுமின்றி அவர்கள் வேறு சில கொள்கைகளையும் விரும்புகிறார்கள் என குறிப்பிட்டார். போர் நிறுத்தத்திற்கு ஒவ்வொருவரும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் போர் முடிவுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அதற்கு ரஷியா தயாராக உள்ளதா? என எனக்கு உறுதியாக தெரியவில்லை. நாங்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை. முதல் நடவடிக்கையாக போர் நிறுத்தம் வேண்டும். உண்மையில் போரை நிறுத்த தயாராக இருக்கிறார்கள் என அவர்கள் காட்ட வேண்டும் என்றார். அதன்பின்னரே கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்காக ரஷியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் தயாராக உள்ளது. இதேபோன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் தெடர்ந்து தொடர்பில் இருப்பது பற்றியும் ஜெலன்ஸ்கி சுட்டி காட்டினார்.