ரூ.2 கோடி லஞ்சம்: கேரளாவில் அமலாக்கத் துறை அதிகாரி உட்பட 4 பேர் மீது வழக்கு

கொச்சி: கேரள தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் மீது விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்துள்ள இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சேகர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த வில்சன் வர்கீஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் குமார் மற்றும் கொச்சியைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ரஞ்சித் வாரியார் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறை கண்காணிப்பில் இருந்த கொல்லத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில், வருவாயை தவறாக காட்டி பணத்தை வெளிநாடுகளுக்கு திருப்பிவிட்டதாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இதன் பின்னர், வில்சன் வர்கீஸ் அந்த தொழிலதிபரை அணுகி, அமலாக்கத் துறை விசாரணையை நிறுத்த ரூ.2 கோடி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அந்த தொழிலதிபரிடம் நான்கு தவணைகளில் தலா ரூ.50 லட்சத்தை மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யச் சொன்னார். இதில் சந்தேகமடைந்த அந்த தொழிலதிபர், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவை அணுகினார். பின்னர் அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் வில்சன் பணத்தைப் பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.

மேலும், விசாரணையில் முகேஷ் குமார் மற்றும் பட்டய கணக்காளர் ரஞ்சித் வாரியார் கைது செய்யப்பட்டனர். தொழிலதிபரின் விவரங்களை வில்சனுடன் பகிர்ந்து கொண்டதாக ரஞ்சித் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘பாஜகவால் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் அமலாக்கத் துறை இயக்குநரகம் இப்போது ஒரு பெரிய ஊழலின் மையத்தில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.