புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை என்பது, வக்பு சொத்துகளை நீக்கும் அதிகாரம், வக்பு கவுன்சிலில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இடம் பெறுவது, அரசு நிலமா என்பதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது ஆகிய 3 அம்சங்கள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் இன்று (மே 20) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீதிமன்றம் மூன்று பிரச்சினைகளை குறிப்பிட்டிருந்தது. இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் நாங்கள் எங்கள் பதிலை தாக்கல் செய்திருந்தோம்.
ஆனால், தற்போது மனுதாரர்களின் எழுத்துபூர்வ சமர்ப்பிப்புகள் வேறு பல பிரச்சினைகளையும் எழுப்புகிறது. மூன்று பிரச்சினைகளுக்கும் பதிலளிக்கும் விதமாக நான் எனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளேன். எனது கோரிக்கை என்னவென்றால், இந்த விசாரணை என்பது மூன்று பிரச்சினைகளுக்கு மட்டுமானதாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே,” என்று வாதிட்டார். அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் இதனை எதிர்த்தனர்.
“வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துகளை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது ஒரு பிரச்சினை. மத்திய மற்றும் மாநில வக்பு கவுன்சிலின் அமைப்பில் முஸ்லிம்கள் மட்டுமே அதிகாரபூர்வ உறுப்பினர்களாக செயல்பட வேண்டும் என்பது இரண்டாவது பிரச்சினை. சொத்து அரசாங்க நிலமா வக்பு நிலமா என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிப்பது மூன்றாவது பிரச்சினை ஆகும்” என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். “வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத 7 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் வக்பு கவுன்சிலை அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட வக்பு சொத்துகள் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில்தான் புதிய சட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர்கள் வாதிட்டனர்.
அதன்பின், “இந்தச் சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள விதிமீறல்கள், தவறுகள் தொடர்பாக போதிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உரிய முடிவு எடுக்க முடியும். நாளையும் (புதன்கிழமை) விசாரணை தொடர்ந்து நடைபெறும்” என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
முன்னதாக, ஏப்ரல் 25 அன்று, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் திருத்தப்பட்ட வக்பு சட்டத்துக்கு ஆதரவாக 1,332 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மேலும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துக்கு நீதிமன்றம் முழு தடை விதிக்க முடியாது என கூறியது. வக்பு திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றதை அடுத்து, கடந்த மாதம் வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த மசோதா மக்களவையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது; 232 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். மாநிலங்களவையில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.