ஹைதராபாத்: ஹைதராபாத் சார்மினார் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குல்ஜார் ஹவுஸ் என்றழைக்கப்படும் பிரஹல்லாத் மோடி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 10 வயதுக்கு உட்பட்ட 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் துயரமான இந்த சம்பவம், அந்த கட்டிடத்திற்குள் காற்று வசதி இல்லாத காரணத்தினால் தான் நடந்தது என ஹைதராபாத் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ காற்று புக முடியாத வீடுகள் உள்ள அந்த கட்டிடத்தில் 6 ஏசிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாடி படி ஏறும் இடத்தில் மின்சார மெயின் பாக்ஸ் வைத்திருந்துள்ளனர். அதன் கீழே 2 சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.
இரவு நேரத்தில் 6 ஏசிக்களும் பயன்படுத்தப்பட்டதால், அதிக வெப்பம் அடைந்து மின்சார பாக்ஸ் தீ பற்றி அருகே உள்ள பைக்குகளும் எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டு, தீ மளமள வென பரவியதே இந்த விபத்துக்கு முக்கிய காரணம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். சார்மினார் பகுதியில் நிஜாம் காலத்து கட்டிடங்கள் எத்தனை உள்ளது? பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா ? காற்று வசதி எப்படி உள்ளது ? என ஒவ்வொரு வீட்டையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.