விருதுநகர்: ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்தது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், முதல் நிலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுமுறையை உறுதி செய்தல், அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் பிரபாகரன் கூறியது: “திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தனி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இந்த பொதுக் குழுவில் முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்போது, தலைமை ஆசிரியர் இல்லாமல் எந்தப் பள்ளியும் இருக்கக் கூடாது என்ற நிலையை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையாக மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும்.
முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அதேபோல் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மறுதேர்வு எழுதும் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால் முதுகலை ஆசிரியர்களை அலைக் கழிக்காமல் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு எடுக்கும் முதுகலை ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதை தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.