சென்னை: சென்னை – எண்ணூரில் வீட்டின் சுற்றுச் சுவர் அமைக்க பள்ளம் தோண்டும் பணியின்போது, ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்ணடி பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர் சென்னை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள பழைய வீட்டை, சமீபத்தில் வாங்கினார். இதையடுத்து, அந்த வீட்டில் சுற்றுச் சுவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் மண்ணில் புதைந்து இருந்தது தெரிய வந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த முஸ்தபா, போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், எண்ணூர் போலீஸார் துப்பறியும் நாயுடன், சம்பவ இடம் விரைந்து, ஆய்வு செய்தனர். பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார், சுமார் ஒன்றரை அடி உயரம் மற்றும் 10 செ.மீ., அகலம் கொண்ட துருப்பிடித்த நிலையில் இருந்த, இரும்பாலான வெடிகுண்டை பறிமுதல் செய்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு 2-ம் உலகப் போரின் போது ஜப்பான் வான் வழியாக தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்து வரும் போலீஸார், வெடிகுண்டை பாதுகாப்பான இடத்தில் வைத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.