ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்… ஏன்…? என்னாச்சு…?

Rohit Sharma Operation: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே டி20 அரங்கில் இளம் தலைமுறையினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணி மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளது.

Team India: மூத்த வீரர்கள் ஓய்வு 

ரவிசந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதே பெரிய கேள்வியாக முன்னிறுத்தப்படுகிறது. அஸ்வின் அனைத்து ஃபார்மட்களில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டார்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்கள் என தெரிகிறது. 2023 உலகக் கோப்பை தொடரை இறுதிப்போட்டி வரை சென்று கோட்டைவிட்ட காரணத்தினால் வரும் 2027 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் ரோஹித் – கோலி  ஜோடி இருக்கிறது என கூறப்படுகிறது. 

Rohit Sharma: ரோஹித் சர்மாவின் உடற்தகுதி?!

விராட் கோலி 36 வயதிலும் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் இன்னும் 2 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போதே ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால், ரோஹித் சர்மா அப்படியல்ல… 38 வயதான அவர் கேப்டன்ஸி கோட்டாவில்தான் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் அணியில் நீடித்து வந்தார். காரணம், அவரது உடற்தகுதி நீண்ட நேரம் களத்தில் இருந்து விளையாடும் அளவிற்கு இல்லை என கிரிக்கெட் வல்லுநர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. 

Rohit Sharma: ஐபிஎல் தொடருக்கு பின் அறுவை சிகிச்சை

இந்நிலையில், 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு முன்னரே டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் ரோஹித், சர்வதேச கிரிக்கெட்டில் தனது அடுத்த கட்டம் குறித்து நகர்ந்துள்ளார். இதனால், ஐபிஎல் 2025 நிறைவடைந்ததும் உடனடியாக அவரது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

அவர் இந்திய அணிக்கு பெரும்பாலான போட்டிகளில் கேப்டனாக இருந்து வந்த காரணத்தினால் அவரால் இந்த அறுவை சிகிச்சை கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ள இயலவில்லை என்றும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால் ஐபிஎல் முடிந்ததும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rohit Sharma: பின் தொடையில் அறுவை சிகிச்சை

ரோஹித் சர்மாவுக்கு இடது காலில் பின் தொடை பகுதியில் நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதனால், அவருக்கு இடது தொடை தசைநார் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். ஆகஸ்ட் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கும் வாய்ப்பு குறைவுதான். அக்டோபரில் ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதே சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

Rohit Sharma: ரோஹித் சர்மா அடுத்த எப்போது வருவார்? 

இந்த சூழலில், அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அறுவை சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைய 3-4 மாதம் ஓய்வில் இருக்க வேண்டியதும் அவசியமாகும். முழு உடற்தகுதியை பெற்று 2027 உலகக் கோப்பை வரை சிறப்பாக விளையாடுவதே ரோஹித் சர்மாவின் திட்டம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.