டெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த தொடரில் எங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. பந்துவீச்சை பொறுத்தவரை சில முக்கிய பந்துவீச்சாளர்களை நாங்கள் இழந்திருந்தாலும் ஆகாஷ் மத்வால் மிகச் சிறப்பாக பந்துவீசினார். ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்த வரை முமென்டம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதனை நமது பக்கம் திருப்பினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் இந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் வெற்றி பெற்றுள்ளோம். எங்களது அணியில் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி பற்றி பேச வார்த்தைகளே இல்லை. அவருடைய ஆட்டம் அற்புதமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குஜராத் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் நகரில் அவர் அடித்த சதம் மிகச் சிறப்பான ஒன்று.
இந்த போட்டியிலும் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை மிடில் ஓவர்களில் வெளிப்படுத்தியிருந்தார். அதோடு அவர் அனைத்து பந்துகளையும் ஏனோ தானோ என்று அடிக்கவில்லை அவர் சரியாக பேட்டிங் செய்கிறார். இந்த போட்டியிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.