பெங்களூரு: பெங்களூருவில் தொடரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஓசூர் சாலை, மைசூரு சாலை, துமக்கூரு சாலை போன்றவற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. நேற்று காலை, மாலை மற்றும் இரவு நேரத்திலும் கனமழை பெய்தது.
இதனால் ஹென்னூர், பைரத்தி, கிருஷ்ணராஜாபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. சில்க் போர்ட், சாந்தி நகர், எலஹங்கா, ஹொர்மாவு உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீடுகளில் இருந்த பொருட்களும், அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் நீரில் மூழ்கின. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
அதிகபட்ச மழை: பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 30-க்கும் மேற்பட்ட மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பெங்களூருவில் கெங்கேரி, ஹெச்.ஏ.எல், மாரத்தஹள்ளி, ஹென்னூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 105.5 மிமீ மழை பதிவானது. அந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கடந்த 1909-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி பெங்களூருவில் 153.9 மிமீ மழை பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக 2011-ம் ஆண்டில் மே மாதத்தில் 112 மிமீ மழையும், 2022-ம் ஆண்டு மே மாதத்தில் 114.6 மிமீ மழையும் பதிவானது. இதற்கு பிறகு நடப்பாண்டில் நேற்று முன் தினம் பெய்த 136 மிமீ மழையே அதிகபட்சமாக உள்ளது.
3 பேர் உயிரிழப்பு: பெங்களூருவில் நேற்று பெய்த மழையால் மின்சாரம் தாக்கி பிடிஎம் லே அவுட்டை சேர்ந்த மனோகர் காமத் (63), தீபக் (14) ஆகியோர் உயிரிழந்தனர். மாரத்தஹள்ளியில் வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் மஞ்சுளா (48) என்பவர் உயிரிழந்தார்.
பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு பெங்களூருவில் 64.5 மிமீ முதல் அதிகபட்சமாக 115.5 மிமீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களிலும், மலைப்பகுதி மாவட்டங்களிலும் அதிதீவிர கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.