காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!

காசா: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் உதவிகள் வரத் தொடங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், தேவைப்படும் புதிய பொருள்கள் இன்னும் மக்களைச் சென்று சேரவில்லை என்றும், மூன்று மாதங்களாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில், சுமார் 20 லட்சம் மக்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹமாஸ்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக காசாவுக்குள் உணவு, மருந்து பொருள்கள் மற்றும் எரி பொருள்கள் செல்லுவதை இஸ்ரேல் தடுத்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. உதவிகள் காசாவுக்குள் நுழையத் தொடங்கி இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளின் கெடுபிடிகளால் புதிய பொருள்கள் தேவைப்படும் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் நீடிப்பதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

14,000 குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்தா? – இதனிடையே, காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் மனிதாபிமான உதவிகள் சென்று சேராவிட்டால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா செயலாளர் டாம் பிளெட்சர் நேற்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், “உதவிகளுடன் நாம் அவர்களிடம் சென்று சேராவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்” என்று கூறியிருந்தார்.

பிளெட்சரின் இந்த அறிக்கை விவாதத்தை கிளப்பியிருக்கும் நிலையில், அது பாலஸ்தீனியர்கள் எதிர்கொண்டுவரும் மனிதாபிமான பேரழிவை அடிக்கோடிட்டு காட்டுவதையே நோக்கமாக கொண்டது என்றே கூறப்படுகிறது. என்றாலும், உற்று நோக்கினால் இந்த எண்ணிக்கை உடனடி இறப்பு என்பதைத் தாண்டி, நீண்டகால கணிப்பை அடிப்படையாக கொண்டது என்றும் கூறப்படுகிறது.

எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: நான்கு குழந்தைகளின் தந்தையான மஹ்முத் அல் ஹாவ் சக பாலஸ்தீனயர்களைப் போலவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் சூப் கிச்சன் முன்பாக காத்துக் கிடக்கிறார். அங்கிருக்கும் அண்டாவை முன்னும் பின்னும் ஆட்டி தனது குழந்தைகளுக்காக சூப் எடுக்க முயற்சிக்கிறார். ஹாவ் இதனைத் தினமும் செய்கிறார். ஏனெனில் தனது குழந்தைகளுக்கு போதுமான அளவு உணவு கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவரிடம் உள்ளது.

வடக்கு காசாவின் இடிபாடுகளுக்கு இடையே உணவு தேடி அலைகிறார். ஆறுமணி நேரம் காத்திருந்தும் தனது குடும்பத்தினருக்கு போதுமான உணவை திரட்ட அவரால் முடியவில்லை. “எனக்கு நோய்வாய்ப்பட்ட ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு என்னால் எதுவும் கொடுக்க முடியவில்லை. அங்கு பிரெட் இல்லை,எதுவுமே இல்லை. எல்லோரும் எங்களுடன் நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்களுடைய குழந்தைகள் மெதுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் வேதனையாக. இது காசாவின் சூடும் நிஜத்தின் ஒரு நிதர்சனம்.

மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் – போப் லியோ: இதனிடையே, பாலஸ்தீனப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று புதிய போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள நிலைமை இன்னும் கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வாராந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய போப், “நியாயமான மனிதாபிமான உதவிகள் நுழைவதை அனுமதிக்கவும், இந்த விரோதப்போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்குமான எனது கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தப் பேரழிவின் விலையை குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.