பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் 3 மகளிர் விடுதிகளை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: பணிபுரியும் மகளிருக்கு பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலையில் 3 தோழி விடுதிகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.176.93 கோடியில் 14 புதிய தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான “தோழி விடுதிகள்” தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை சென்னை, திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் 16 தோழி விடுதிகளில் 1,380-க்கும் மேற்பட்ட பணிபுரியும் மகளிர் பயன்பெறுகின்றனர்.

பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக உள்ளதால், பணிபுரியும் மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில், பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுதலாக தற்போது சென்னை – பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ரூ.38.15 கோடியில் 442 படுக்கைகள் கொண்ட 3 புதிய தோழி விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார் .

மேலும், தரமணி, சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் ரூ.176.93 கோடி மதிப்பில் 2,000 பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் 14 தோழி விடுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24 மணிநேர பாதுகாப்பு வசதி, வை-பை வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, தொலைக்காட்சி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் நியாயமான வாடகையில் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீமுரளிதரன், மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ச.வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.