Mumbai Indians Qualified For IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்னும் ஒரு வார காலத்தில் நிறைவடைய உள்ளன. தற்போதைக்கு குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. 5 அணிகள் பிளே ஆப் ரேஸில் இருந்தும் வெளியேறிவிட்டன.
அந்த வகையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லக்கூடிய 4வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவே இன்றைய மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பார்க்கப்பட்டது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது.
Mumbai Indians: ஆரம்பத்தில் நிதானம்… கடைசியில் அதிரடி
இன்று டெல்லி அணிக்கு ஃபாப் டூ பிளெசிஸ் கேப்டனாக செயல்பட்டார், அக்சர் பட்டேல் காயம் காரணமாக விளையாடவில்லை. அதேபோல், டி நடராஜனும் விளையாடவில்லை. மாதவ் திவாரி, முகேஷ் குமார் ஆகியோர் இன்று பந்துவீசினர். கேஎல் ராகுல் முதன்மையான பிளேயிங் லெவனில் விளையாடவில்லை.
தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 21(13) ரன்களில் ஆட்டமிழக்க பவர்பிளே முடிவில் 54 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை. தொடர்ந்து ரிக்கில்டன் 25 (18) ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் – திலக் வர்மா ஜோடி அடுத்து சில ஓவர்களுக்கு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது.
தொடர்ந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஒரு கட்டத்தில் அதிரடியை தொடங்கினார். ஆனால் அந்த சமயம் திலக் வர்மா 27(27), ஹர்திக் பாண்டியா 3(6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் சூர்யகுமார் மற்றும் நமன் திர் ஆகியோர் இணைந்து மும்பை இந்தியன்ஸின் ஸ்கோரை எங்கேயோ எடுத்துச் சென்றனர்.
Mumbai Indians: சூர்யகுமார் – நமன் திர் அதிரடி ஃபினிஷிங்
அதாவது, பாண்டியா ஆட்டமிழந்து நமன் திர் உள்ளே வந்தபோது மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை அடித்திருந்தது. ஆனால், மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை அடித்திருந்தது. அதாவது 21 பந்துகளில் 57 ரன்களை சூர்யகுமார் – நமன் திர் ஜோடி அடித்திருந்தது. இறுதியில் சூர்யகுமார் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 73 ரன்களையும், நமன் திர் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 24 ரன்களையும் அடித்திருந்தனர். டெல்லி பந்துவீச்சில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள், சமீரா, முஸ்தபிஷூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
Mumbai Indians: மும்பையின் அசத்தல் பந்துவீச்சு
181 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது. டூ பிளெசிஸ் 6(7), கேஎல் ராகுல் 11(6), அபிஷேக் பொரேல் 6(9) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளேவில் விப்ராஜ் நிகம் மட்டுமே சற்று அதிரடி காட்டினார். அதன்படி பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 49 ரன்களை டெல்லி எடுத்திருந்தது.
அதன்பின், மிட்செல் சான்ட்னரின் அருமையான பந்துவீச்சால் டெல்லி அணி பேட்டர்கள் திணறினர். அவர் பந்துவீச்சில் நிகாம் 20(11) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த ஸ்டப்ஸை பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் ஒரு 5 ஓவர்களுக்கு சமீர் ரிஸ்வி – அஷூடோஷ் சர்மா ஜோடி பேட்டிங் பிடித்தது. இந்த ஜோடி 38 ரன்களை அடித்திருந்தது.
அப்போது 15வது ஓவரை சான்ட்னர் வீசினார். அந்த ஓவரில் ரிஸ்வி மற்றும் அஷூடோஷ் சர்மாவின் விக்கெட்டுகளை அவர் எடுத்தார். ரிஸ்வி 35 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் மற்றும் அஷூடோஷ் 16 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 18 ரன்களையே அடித்திருந்தார். அடுத்து வந்த மாதவ் திவாரியும் 3 ரன்களில் பும்ராவிடம் வீழ்ந்தார்.
Mumbai Indians: ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ்
இறுதியில், டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம், 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சில் சான்ட்னர் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். பும்ரா 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். போல்ட், சஹார், கரண் சர்மா, வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகானக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
Mumbai Indians: முதலிரண்டு இடங்களுக்கு கடும் போட்டி
இன்றைய வெற்றியின் மூலம் ஐபிஎல் 2025 தொடரில் 4வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியேறிவிட்டது. இன்னும் உள்ள 7 லீக் போட்டிகளில் பல போட்டிகள் சம்பிரதாய போட்டிகள் எனலாம். மேலும், தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள குஜராத் (18), ஆர்சிபி (17), பஞ்சாப் (17), மும்பை (16) ஆகிய அணிகளுக்கு இடையே முதலிரண்டு இடங்களுக்குதான் கடுமையான போட்டி இருக்கும். மும்பையை தவிர மற்ற 3 அணிகளுக்கும் தலா 2 போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.