மதுரை: மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வாகன பராமரிப்பு உதவிப் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் சித்ரா உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ‘அவர் லேண்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது. மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கு 450 முதல்நிலை குப்பை சேகரிப்பு வாகனங்கள், 15 இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குப்பையை சேகரிப்பதற்கும், அவற்றை உரக்கிடங்குக்கு கொண்டு செல்வதற்கும் ‘அவர் லேண்ட்’ நிறுவனத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டாலும், மாநகராட்சிக்கு சொந்தமான 100 முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு வாகனங்கள், கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள், டிராக்டர் போன்ற பல்வேறு வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கான வாடகை தொகையை ‘அவர் லேண்ட்’ நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பணத்திலிருந்து மாநகராட்சி நிர்வாகம் பிடித்தம் செய்துகொள்கிறது.
மாநகராட்சி வாகனங்களை பராமரிக்கும் பணியை உதவிப்பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 2, 3, 4 ஆகிய மண்டலத்துக்கான வாகன பராமரிப்பை உதவி பொறியாளர் (பொ) ரிச்சர்ட் மேற்கொண்டு வந்தார். இவர், மாநகராட்சி குப்பை சேகரிப்பு வாகனங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர் சித்ரா நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து உதவி பொறியாளர் (பொ) ரிச்சர்டை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், “புதிய குப்பை சேகரிப்பு வாகனங்களை வாங்குவதற்கு டெண்டர் விட்ட பிறகும் அவற்றை வாங்குவதற்கு ரிச்சர்ட் நடவடிக்கை எடுக்கவில்லை. எப்சி-க்கு சென்ற 15 மாநகராட்சி வாகனங்கள் மீண்டும் திரும்பி வரவில்லை. கவுன்சிலர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் குப்பை சேகரிப்பு வாகனங்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி வருகின்றனர். இவரது அலட்சியத்தால் ஏராளமான மாநகராட்சி வாகனங்கள் பழுதடைந்துவிட்டன. குப்பை சேகரிக்க போதிய வாகனங்கள் இல்லாமல் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறினர்.