Sai Sudharsan IPL 2025 : நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் பேட்டிங்கில்உட்சபட்ச பார்மில் இருக்கிறார் சாய் சுதர்சன். குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர், ஒவ்வொரு ஐபிஎல் போட்டியில் அற்புதமாக விளையாடி ரன்களை வேட்டையாடி வருகிறார். இதனால் இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 617 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளார். அவர் விராட் கோலியின் வரலாற்று சாதனையை முறியடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை விராட் கோலி வசம் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 973 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஐபிஎல் சீசனில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். சாய் சுதர்சன் இந்த சீசனில் அந்த ரன்களை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இன்னும் எஞ்சியிருக்கும் லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்று, இறுதிப்போட்டிகளில் இதே பார்மில் அவர் ஆடினால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
சாய் சுதர்சன் பேட்டி
இதுகுறித்து சாய் சுதர்சன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். ரன்கள் எடுப்பதிலேயே எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. என்னால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ரன்களை குவிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக என்னுடைய எல்லைகளை விரிவுபடுத்துவதில் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். டி20 போட்டிகளில் நீங்கள் எவ்வளவு விரைவாக ரன்களை குவிக்கிறீர்கள் என்பது முக்கியம். அதில் கூடுதல் கவனம் செலுத்தும் அதேவேளையில் ஆட்டத்தின் நுணுங்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். பேட்டிங்கின் ஒவ்வொரு துளி அம்சத்தையும் கற்றுக்கொள்ளும்போது மட்டுமே உங்களால் ரன்களை குவிக்க முடியும். என்னைப் பொறுத்தவரை ஆட்டத்தின் நுணுங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
ஐபிஎல் என்பது கிரிக்கெட் வாழ்க்கையில் குழந்தை எடுத்து வைக்கும் முதல் அடியைப்போல் எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய லட்சியம். உங்கள் லட்சியத்துகாக நீங்கள் தினம்தோறும் உழைக்கும்போது மட்டுமே அதற்கான இடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்டை பெற முடியும். இந்த புரிதலின் அடிப்படையில் நான் தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். என்னால் முடிந்ததை இந்திய அணிக்காவும், நாட்டிற்காகவும் செய்ய விரும்புகிறேன் என சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: எங்களுக்கு அந்த ஒரு வீரர் வேண்டும் – தோனி சொன்னது யாரை தெரியுமா?
மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!