லாகூர்,
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயது செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பை இந்தியா பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
இதனிடையே லஷ்கர் அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா. இவரை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், லஷ்கர் இணை நிறுவனரான பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர் நேற்று மர்மமான முறையில் வீட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அமீர் ஹம்சாவின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அமீர் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். அமீர் தற்போது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீர் வீட்டில் இருந்து எப்படி கீழே விழுந்தார்? இது விபத்தா? திட்டமிட்ட சதியா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்ட லஷ்கர் பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் கடந்த 18ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.