‘மும்பை வெற்றி!’
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. சூர்யாவின் பக்குவமான பேட்டிங்காலும் சாண்ட்னரின் அற்புதமான பௌலிங்காலும் இதை சாதித்திருக்கிறது மும்பை அணி. போட்டி எப்படி மும்பைக்கு சாதகமாக மாறியது? டெல்லி எங்கே சறுக்கியது?

‘மும்பையின் கம்பேக்!’
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனை மோசமாகத்தான் தொடங்கியிருந்தது. ஆடிய போட்டிகள் அத்தனையிலும் தோற்றிருந்தது. அப்போது டெல்லிக்கு எதிரான போட்டி ஒன்றில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் பார்முக்கு வந்தது. பேட்டிங், பௌலிங், பீல்டிங் என மூன்று டிபார்ட்மென்ட்டிலும் மிரட்டலாக செயல்பட்டார்கள்.
அங்கே இருந்துதான் மும்பை ஆட்டத்துக்குள் வந்தது. அதன்பிறகு, சரவெடிதான். இதோ இப்போது அதே டெல்லியை மீண்டும் வீழ்த்தி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றுவிட்டார்கள்.

‘மும்பையின் பேட்டிங்!’
மும்பை அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்களில் 180 ரன்களை எடுத்திருந்தனர். வான்கடேவில் இந்த முறை இரண்டு விதமான பிட்ச்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று முழுக்க முழுக்க ப்ளாட்டான பேட்டிங் பிட்ச். இன்னொன்று பந்து மெதுவாக வரக்கூடிய பௌலிங்குக்கு சாதகமான பிட்ச். இன்று இரண்டாவது பிட்ச்தான் பயன்படுத்தப்பட்டது. அதனால் மும்பையும் பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறியது.
பவர்ப்ளேயில் 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். மிடில் ஓவர்கள் இன்னும் மோசமாக இருந்தது. 7-15 இந்த 9 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். குல்தீப் யாதவ்வும் விப்ரஜ் நிஹமும் அற்புதமாக வீசியிருந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் ஒரு முனையில் நின்று பக்குவமாக ஆடினார்.

கடைசி வரை நின்று விட வேண்டும் என்கிற உத்வேகத்தோடு ஆடினார். மும்பை அணி சென்ற வேகத்துக்கு 150-160 ரன்களைத்தான் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 2 ஓவர்களில் ஆட்டம் மாறியது. அந்த 2 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 48 ரன்களை எடுத்தது. நமன் தீர் 8 பந்துகளில் 24 ரன்களை எடுத்திருந்தார். முகேஷ் குமார் வீசிய 19 வது ஓவரில் 27 ரன்களை கொடுத்திருந்தார். இந்த ஓவரில்தான் நமன் தீர் ருத்ரதாண்டவம் ஆடினார்
சமீரா வீசிய கடைசி ஓவரை சூர்யா எடுத்துக்கொண்டார். 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 21 ரன்களை சேர்த்தார். இந்த 2 ஓவர்கள்தான் மும்பையை சவாலான ஸ்கோருக்கு எடுத்துச் சென்றது.

‘மிரட்டல் பௌலிங்!’
டெல்லிக்கு 181 ரன்கள் டார்கெட். டெல்லி போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டு சொதப்பியது. பவர்ப்ளேக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்தனர். டூப்ளெஸ்சிஸ், ராகுல் ஆகியோரின் விக்கெட்டை சஹாரும் போல்டும் எடுத்துக் கொடுத்தனர். அபிஷேக் பொரேலின் விக்கெட்டை வில் ஜாக்ஸ் எடுத்துக் கொடுத்தார்.

பவர்ப்ளேயிலேயே டெல்லியின் முக்கிய விக்கெட்டுகள் விழுந்ததைப் போல தோன்றும். ஆனால், அதன்பிறகும் டெல்லியிடம் அதிரடியான வீரர்கள் இருந்தனர். மிடில் ஓவர்களில் அவர்களை திணறடித்து போட்டியை மாற்றியது சாண்ட்னர்தான். 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து விப்ரஜ், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு ஸ்பின் மாஸ்டர் க்ளாஸையே நிகழ்த்தியிருந்தார். முழுக்க முழுக்க ஸ்டம்ப் டூ ஸ்டம்பாகத்தான் வீசினார்.
பேட்டர்களுக்கு ஷாட் ஆட இடமே கொடுக்கவில்லை. ஒரு பந்தை நன்றாக லெக் ஸ்டம்பை நோக்கி உள்ளே வீசினார். ஒரு பந்தை ஆப் ஸ்டம்புக்கு வெளியே திருப்பினார். குட் லெந்த், திடீர் திடீரென கொஞ்சம் புல் லெந்த் என லெந்திலும் ட்விஸ்ட் கொடுத்தார். எந்த பேட்டராலும் சாண்ட்னரை எதிர்கொள்ளவே முடியவில்லை. அபாரமான பௌலிங். டெல்லி அணியும் 121 ரன்களுக்கே ஆல் அவுட்டும் ஆனது.

எப்போதுமே Do or Die போட்டிகளில் மும்பை அணி சோடை போகவே செய்யாது. ஒவ்வொரு வீரரும் துடிப்பாக தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள். அதுதான் இன்றும் நடந்திருக்கிறது. நான்காவது அணியாக மும்பை ப்ளே ஆப்ஸூக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டது. இனி ப்ளே ஆப்ஸூம் பரபரக்கும்.