பிகானிர்: பாகிஸ்தானுடன் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதிபடத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் 3 முக்கிய கொள்கைகளை இந்தியா நிறுவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானின் பிகானிரில் ரூ. 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அப்பாவி உயிர்களைக் குறிவைத்தனர். பஹல்காமில் குண்டுகள் சுடப்பட்டாலும், அவை 140 கோடி இந்தியர்களின் இதயங்களைக் காயப்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியுடன் நாட்டை ஒன்றிணைத்தது.
தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு முழு செயல்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது. முப்படைகளும் இணைந்து, அவர்களை அடிபணியச் செய்தனர். இந்தியா 22 நிமிடங்களுக்குள் பதிலடி கொடுத்து, ஒன்பது முக்கிய பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது. இந்த நடவடிக்கை நாட்டின் வலிமையை நிரூபித்தது.
ஆபரேஷன் சிந்தூர் பழிவாங்கும் செயல் அல்ல, மாறாக நீதியின் ஒரு புதிய வடிவம். இது வெறும் கோபத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் அசைக்க முடியாத வலிமை மற்றும் உறுதியின் வெளிப்பாடு. தேசம் ஒரு துணிச்சலான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, எதிரியை நேரடியாகவும் தீர்க்கமாகவும் தாக்கியது. பயங்கரவாதத்தை நசுக்குவது என்பது வெறும் ஒரு உத்தி மட்டுமல்ல, ஒரு கொள்கை, இதுதான் இந்தியா, இதுதான் புதிய இந்தியா.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் மூன்று முக்கிய கொள்கைகளை இந்தியா நிறுவியுள்ளது. இந்தியாவின் மீதான எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் ஒரு தீர்க்கமான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும், நேரம், முறை மற்றும் விதிமுறைகளை இந்தியாவின் ஆயுதப் படைகள் மட்டுமே தீர்மானிக்கும். இதுவே நமது முதல் கொள்கை. இரண்டாவதாக, அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது. மூன்றாவதாக, பயங்கரவாத மூளைகளுக்கும் அவர்களை ஆதரிக்கும் அரசுகளுக்கும் இடையில் இந்தியா இனி வேறுபடுத்திப் பார்க்காது.
பாகிஸ்தானின் அரசு மற்றும் அரசு சாரா ஆதரவாளர்கள் என்ற வேறுபாட்டை இந்தியா நிராகரிக்கிறது. பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்களைக் கொண்ட ஏழு தனித்துவமான குழுக்கள், பாகிஸ்தானின் உண்மையான முகத்தை உலகின் முன்வைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் நடந்த மோதல்களில் பாகிஸ்தான் தொடர் தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு பாகிஸ்தான் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. வெளிப்படையான போர்களில் வெற்றிபெற முடியாமல், பாகிஸ்தான் நீண்ட காலமாக பயங்கரவாத செயல்களை இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. வன்முறை நடவடிக்கைகள் வாயிலாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் இந்தியாவின் உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிட்டது. ஆனால், எனது தலைமையின் கீழ், நாடு வலிமையானதாகவும், அசைக்க முடியாததாகவும் உள்ளது. இந்தியா மீதான எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பாகிஸ்தான் ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் விலையை கொடுக்க நேரிடும்.
பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ற நல் விமான நிலையத்தில்தான் நான் தரையிறங்கினேன். பாகிஸ்தானால் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்திய ராணுவம் எல்லையைக் கடந்து சென்று நடத்திய துல்லியத் தாக்குதல்களால், அந்நாட்டின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் பல நாட்களுக்கு மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளோ, பேச்சுவார்த்தையோ நடத்தப்பட மாட்டாது. இனி அந்நாட்டுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சு வார்த்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்ததாக மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்தால், அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும். பாகிஸ்தான் தனக்கு உரிய தண்ணீரைப் பெற இந்தியா அனுமதிக்காது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதன் வாயிலாக அது பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும். இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாடு, உலகில் வேறு எந்த சக்தியாலும் அசைக்க முடியாதது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பாதுகாப்பு மற்றும் வளம் ஆகிய இரண்டும் மிகவும் அவசியம். இந்த தொலைநோக்குப் பார்வை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வலுப்படுத்தப்பட்டால் மட்டுமே அதனை உணர முடியும்” என தெரிவித்தார்.