வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தால், நாங்கள் அந்த மோதலை முழுவதுமாக தீர்த்து வைத்தோம். நான் அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன். அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் பெரிய ஒப்பந்தம் செய்து வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் மோதலில் யாராவது கடைசியாக சுட வேண்டியிருந்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு மோசமாகிக்கொண்டே போனது. மோதல் பெரியதாகவும் நாடுகளுக்குள் ஆழமாகவும் சென்றது. நாங்கள் அவர்களிடம் பேசினோம், நாங்கள் அதை சரிசெய்துவிட்டோம் என்று சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன், இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏதோ நடக்கிறது, அது ட்ரம்பின் தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பாகிஸ்தானில் சில சிறந்த மனிதர்களும், சில நல்ல தலைவரும் உள்ளனர். இந்தியாவில் என் நண்பர் மோடி உள்ளார், அவர் ஒரு சிறந்த மனிதர், நான் அவர்கள் இருவரையும் அழைத்து பேசினேன். இது நல்ல விஷயம்” என்று ட்ரம்ப் கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்க தான் உதவியதாக அமெரிக்க அதிபர் பலமுறை கூறி வருகிறார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் பதற்றம் நிலவியது. மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டின.
இதனையடுத்து, அமெரிக்கா மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்தது சலசலப்புகளை உருவாக்கியது.