“சார்கள், தம்பிகளுடன் திமுகவின் தொடர்பு என்ன?” – எல்.முருகன்

சென்னை: “சார்கள், தம்பிகள் உடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. அரக்கோணம் பெண் பாலியல் கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்,” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட 13 ரயில் நிலையங்கள் திறப்புவிழா பரங்கிமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குபிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் 13 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.14 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

ரயில் வேகமாக செல்வது போல, ரயில்வே பணிகளும் வேகம் பெற்று இந்தியா வளர்ந்திருக்கிறது. 2047-ல் உலகின் நம்பர் ஒன் நாடாக மாறுவதற்காக பல திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலில் யார் அந்த சார்? என இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அரக்கோணம் விவகாரத்திலும் பல ‘சார்’கள் உள்ளனர். ஆனால், காவல்துறை அவர்களை காப்பாற்றப் பார்க்கிறது.

அரக்கோணத்தில் திமுக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனால், அந்த ‘சார்’களை கண்டுபிடிக்கவே தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க முன்வந்துள்ளது. அந்த சகோதரியுடன் பாஜக இருக்கிறது. தமிழகத்தில் ‘சார்’கள் அதிகமானதுபோல, தம்பிகளும் அதிகமாகி உள்ளனர். டாஸ்மாக் விவகாரம் மூலம் வெளிவந்திருக்கும் தம்பிகள் தான் அதிகாரம் பெற்றுள்ளனர்.

சார்கள், தம்பிகளுடன் திமுகவின் தொடர்பு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. அரக்கோணம் பெண் பாலியல் கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

அமலாக்கத்துறை என்பது சட்டப்படியான ஒரு அமைப்பு. உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வார்கள். முழுமையான வாதங்கள் முன்வைக்கப்படும். இவ்விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.

கூட்டணி குறித்து பேசுவதற்கு இது நேரமல்ல. கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.