தேஷ்நோக்/சென்னை: நாடு முழுவதும் ரூ.1,100 கோடியில் புதுப்பிக்கப்பட்ட 103 அமிர்த ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்தியாவில் நாள்தோறும் சுமார் 3 கோடி பேரும், ஓராண்டில் சுமார் 800 கோடி பேரும் ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலையம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. முதல்கட்டமாக கடந்த 2023-ம் ஆண்டில் 58 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதில் 103 அமிர்த ரயில் நிலையங்கள் ரூ.1,100 கோடியில் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ராஜஸ்தானின் தேஷ்நோக் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் 103 ரயில் நிலையங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
இதன்படி உத்தர பிரதேசத்தில் 19, குஜராத்தில் 16, மகாராஷ்டிராவில் 15, தமிழ்நாட்டில் 9, ராஜஸ்தானில் 8, மத்திய பிரதேசத்தில் 6, கர்நாடகாவில் 5, சத்தீஸ்கரில் 5, தெலங்கானாவில் 3, மேற்குவங்கத்தில் 3, ஜார்க்கண்டில் 3, கேரளாவில் 2, பிஹாரில் 2, புதுச்சேரி, இமாச்சலபிரதேசம், அசாம், ஹரியானாவில் தலா 1 உட்பட மொத்தம் 103 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், இலவச வைபை, நவீன மின்னணு தகவல் பலகைகள், கூடுதல் வசதிகளுடன்கூடிய காத்திருக்கும் அறை, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகளை ஒன்றிணைக்கும் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி, பார்வையற்றோருக்கான நடைபாதை, விசாலமான பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
தேஷ்நோக் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். முன்னதாக கர்னி தேவி கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார்.
தமிழகத்தில்… தமிழகத்தில் பணிகள் நிறைவடைந்த 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.11.05 கோடியிலும், சாமல்பட்டி நிலையம் ரூ.8 கோடியிலும், ரங்கம் ரயில் நிலையம் ரூ.6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியிலும், போளூர் ரயில் நிலையம் ரூ.6.15 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், சிதம்பரம் ரயில் நிலையம் ரூ.5.96 கோடியிலும், விருத்தாசலம் ரயில் நிலையம் ரூ.9.17 கோடியிலும், மன்னார்குடி ரயில் நிலையம் ரூ.4.69 கோடி மதிப்பிலும், குழித்துறை ரயில் நிலையம் ரூ.5.35 கோடியிலும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “மும்பை – அகமதாபாத்துக்கு புல்லட் ரயில் விரைவில் வர உள்ளது. சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்படும் ரயில், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. முன்பு நாம் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். தற்போது, ரூ.50,000 கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இதுதான் புதிய பாரதம்” என்றார்.இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் தேஜ்பிரதாப் சிங் தொழிலதிபர் நல்லி குப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.