இளைஞர்களுக்கான அரசியலை தவெக ஊக்குவிக்கவில்லை. இன்று நான் திமுகவில் இணைந்துள்ளேன். தவெக என்பது இன்னொரு பாஜக என்பதே உண்மை என்று திமுகவில் இணைந்த முன்னாள் தவெக நிர்வாகி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவி கூறியதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த ஒரு வருடமாக இணைந்து பயணம் செய்தேன். தவெகவை பொறுத்தவரை இளைஞர்களுக்கான அரசியலை முன்னெடுப்பார்கள் என்றுதான் என்னைப் போன்ற பலரும் அக்கட்சியில் இணைந்தோம். ஆனால் எங்களுக்கு அதிருப்தியே மிச்சம். இளைஞர்களுக்கான அரசியலை அவர்கள் ஊக்குவிக்கவில்லை. இன்று நான் திமுகவில் இணைந்துள்ளேன். தவெக என்பது இன்னொரு பாஜக என்பதே உண்மை. இன்றிலிருந்து திமுக வழியாக என்னுடைய மக்கள் பணி தொடரும்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து சமீபத்தில் விலகிய கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கோவை கவுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. தமிழக வெற்றி கழகத்தில் பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். அரசியல் கட்சியில் இணைந்து மக்கள் சேவையாற்ற விரும்பினால் பாஜகவில் இணையலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். மதிமுக தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (மே 22) மாலை கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் வைஷ்ணவி, திமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.