ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பகுதி நக்சல்களின் ஒரு முக்கிய மையமாக அறியப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களோடு தெலுங்கானா காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. அப்போது நடந்த என்கவுன்ட்டரில் 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சத்தீஷ்கார் டி.ஜி.பி. அருண் தேவ் கவுதம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சுட்டுக்கொல்லப்பட்ட அனைத்து நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. 47, எஸ்.எல்.ஆர்., இன்சாஸ் மற்றும் .303 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் நக்சல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மத்திய உள்துறை மந்திரியின் உறுதி மொழியாகும். அதற்கு முன்பே அது ஒழிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.