புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் நாடுகள் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளன.
ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சியை விளக்கும் விதமாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.பி சஞ்சய் குமார் ஜா மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் முறையே ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணித்தன. அங்கு அவர்கள் இன்று பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் கொள்கைகளை எடுத்துரைத்தனர்.
ஏழு பிரதிநிதிகள் குழுக்களில் ஒன்றான, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புக்குழு தலைவர் அலி ரஷித் அல் நுவாமி மற்றும் அமைச்சர் சேக் நஹாயனா ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தை ஏப்.22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்த பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் கவனம் செலுத்துவதாக இருந்தது. அப்போது ஸ்ரீகாந்த் ஷிண்டே ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதியான ஆதரவினைக் கோரினார்.
இந்த சந்திப்பு குறித்து ஷிண்டே கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரக பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பயங்கரவாதத்துக்கான எதிராக இந்தியாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் தோளோடு தோள் நிற்கும். தீவிரவாதம் என்பது இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் இல்லை. மாறாக, மனிதகுலத்தின் மீதான தாக்குதல். மதத்தின் போர்வையில் நடக்கும் அனைத்து வடிவிலான பங்கரவாதத்தையும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் நிராகரித்தனர்.
பன்முகத்தன்மை மற்றும் வளத்துக்கு பெயர்பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்திய தாக்குதலைக் கண்டித்த முதல் தேசமாகும். ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை அனுபவிக்கின்றனர். இது அமைத்திக்கான நாட்டின் அர்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.” என்றார்.
இதேபோல், ஜப்பான் சென்றுள்ள ஜேடியு எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் டகேஷி லவ்யாவைச் சந்தித்தது. அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு வலுவான ஆதரவினை அளித்த ஜப்பான், இந்தியாவின் நிதானத்தை வெகுவாக பாராட்டியது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்த ஜப்பான் வெளியுறவு அமைச்சர், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து போராடுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
ஜா தலைமையிலான பிரதிநிதிகள் குழு அடுத்ததாக, தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணிக்க இருக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாத கொள்கைக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை குறித்தும் விளக்குவதற்காக ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு அடுத்ததாக, காங்கோ, லைபிரியா மற்றும் சியாரா லியோன் நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறது.