"விராட்டுக்கு எதிராக விளையாட முடியாமல் போவது அவமானம்" – பென் ஸ்டோக்ஸ்!

2025 ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இத்தொடருக்கு முன்பாக இந்திய அணியின் இரு வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததை அடுத்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 

விராட் கோலி இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்ததற்கு சில முக்கிய காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் கூட, விராட் கோலியை புகழ்ந்து தள்ளினார். 

இச்சூழலில் இன்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை விளையாட தொடங்கியது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விராட் கோலியை பாராட்டி பேசி இருக்கிறார். 

இந்தியாவுக்கு கோலியின் போராட்ட உணர்வு, களத்தில் அவரது போட்டி மனப்பான்மை, வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவை பெரிதும் இழப்பாக இருக்கும். அவர் 18ஆம் எண்ணை தனதாக்கி உள்ளார். இனி மற்றொரு இந்திய வீரரின் முதுகில் இந்த எண்ணை நாம் பார்க்காமல் போகலாம். அவர் நீண்ட காலமாக மிகச் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.

நான் அவருக்கு செய்தி அனுப்பி, இந்த முறை அவருக்கு எதிராக விளையாட முடியாமல் போவது அவமானமாக உள்ளது என்று கூறினேன். விராட்டுக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எங்களுக்கு இடையேயான போட்டியை நாங்கள் எப்போதும் ரசித்தோம், ஏனெனில் களத்தில் எங்களுக்கு ஒரே மனநிலை உள்ளது. அது ஒரு சவாலான போர்,” என்றார்.

தொடர்ந்து கோலியின் டெஸ்ட் வாழ்க்கை குறித்து பேசிய அவர், கோலி அற்புதமாக இருந்தார். அவர் பெற்ற அனைத்து பாராட்டுகளையும் அவர் தகுதியுடன் பெறுகிறார். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அவருக்கு ஏராளமான புகழ் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் அவர் மிகச் சிறந்தவராக இருந்தார்.

விராட் பற்றி நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பது, அவர் கவர் டிரைவ் மூலம் பந்தை எவ்வளவு வலுவாக அடிக்கிறார் என்பதுதான். அந்த கவர் டிரைவ் நீண்ட காலம் நினைவில் நிலைத்திருக்கும்,” என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார். 

மேலும் படிங்க: DC vs MI: மும்பை அணி ஏமாற்றி வென்றதா? டெல்லிக்கு எதிரான போட்டியில் என்ன நடந்தது?

மேலும் படிங்க: ரிஷப் பண்ட் இதை செய்தால், பழைய நிலைக்கு திரும்பலாம்.. பிரச்சனையை சொன்ன யோக்ராஜ் சிங்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.