ChatGPT: சமீப காலங்களில் தொழில்நுட்பம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் ஏராளமான மேம்படுகளில் சமீபகால மேம்பாடான ChatGPT, மனிதர்களுக்கு பல வகைகளில் உதவி வருகின்றது. நமது அன்றாட பணிகள் முதல் சிக்கலான அலுவலக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் வரை, அனைத்திலும் இதற்கான தீர்வு உள்ளது. இதன் மூலம் உதவி பெற்றவர்கள் ஏராளம். சமீபத்தில் சேட்ஜிபிடி மூலம் பெற்ற உதவியை பற்றியும், அதில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றியும் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதை இங்கே காணலாம்.
ஒரு நபர் திடீரென கொலம்பியாவுக்கான தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொண்டார். மருத்துவ அவசரநிலை காரணமாக, அவர் தனது விமான மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது,
ஆனால் விமான நிறுவனமும் ஹோட்டலும் பணத்தைத் திரும்பத் தர மறுத்துவிட்டன. சுமார் $2,500 (சுமார் ரூ. 2 லட்சம்) தொகை சிக்கிக் கொண்டது. அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் ஒரு தனித்துவமான “வழக்கறிஞரின்” உதவியை நாடினார். அந்த வழக்கறிஞர்தான் ChatGPT.
ரெடிட்டில் பகிரப்பட்ட அனுபவம்
ரெடிட்டில் பகிரப்பட்ட அவரது கதையில், அவர் கொலம்பியாவின் மெடலினுக்கு விமானம் மூலம் பயணம் செய்ய இருந்ததாகவும், ஆனால் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகவும், மருத்துவர் அவரைப் பயணம் செய்யத் தடை விதித்ததாகவும் கூறியுள்ளார். மருத்துவர் அவரது நிலையை Generalised Anxiety Disorder (GAD) என்று கூறினார். அந்த நபரும் மருத்துவரின் குறிப்பை எடுத்துக்கொண்டார். ஆனால், இந்த விளக்கங்களை அளித்த பின்னரும், ஹோட்டல் அவரது தொகையை மீண்டும் அளிக்க கண்டிப்பாக மறுத்துவிட்டது. “ஹோட்டலில் நோ-கேன்சலேஷன் கொள்கை இருந்தது. ஆகையால் அவர்கள் முற்றிலுமாக மறுத்துவிட்டார்கள்” என்று அவர் எழுதினார். “எங்களிடம் எந்த கேன்சலேஷன் பாலிசியும் இல்லை” என்றும் விமான நிறுவனமும் கூறியது.
ChatGPT இடம் ‘என் வழக்கறிஞரா இரு’ என்று சொன்னேன்…
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் ChatGPT-யிடம் உதவி கேட்டு, ‘நீ என் வழக்கறிஞராக மாறு’ என்றார். அந்த நபர் தனது மருத்துவ நிலை மற்றும் மருத்துவச் சான்றிதழ் குறித்து ChatGPT-க்குத் தெரிவித்தார். மேலும் Expedia, ஹோட்டல் மற்றும் விமான நிறுவனத்தின் கொள்கைகளைப் படித்த பிறகு ChatGPT அற்புதமான ஒரு ‘ரீஃபண்ட் லெட்டரை’ தயார் செய்தது.
இந்தக் கடிதத்தை அனுப்பிய பிறகு, ஓரளவு வெற்றி கிடைத்தது. ஹோட்டல் பணத்தைத் திரும்பத் தர ஒப்புக்கொண்டது. ஆனால் விமான நிறுவனம் இன்னும் உறுதியாக நின்று, “மரணம் அல்லது கடுமையான நோய் ஏற்பட்டால் மட்டுமே பணம் திரும்பப் பெறப்படும்” என்று கூறியது.
ChatGPT ஒரு வலுவான கடிதத்தை எழுதியது
ஆனால் அந்த நபர் கைவிடவில்லை. அவர் விமான நிறுவனத்தின் பதிலை ChatGPT-க்கு திருப்பி அனுப்பி, வலுவான கடிதத்தை எழுதித் தரச் சொன்னார். இந்த முறை, ChatGPT அந்த விமான நிறுவனத்தின் கொள்கைகளின் வார்த்தைகளை கவனமாகப் படித்து, மன ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை ஆழமாக விளக்கும் ஒரு கடிதத்தை எழுதியது.
“எனது மருத்துவ நிலை விமானப் பயணத்தை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றி அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் விமான நிறுவனத்தின் நடவடிக்கை மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதற்குச் சமம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முறை ChatGPT இலக்கை குறி வைத்து சரியான ஒரு கடிதத்தை எழுதியது,” என்று அவர் எழுதியுள்ளார். கடிதத்தை அனுப்பிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, விமான நிறுவனம் தனது முடிவை மாற்றிக் கொண்டு பணத்தைத் திரும்ப அளித்தது.
‘நான் ChatGPT-யின் உதவியைப் பெறாமல் இருந்திருந்தால், ஒரு சட்ட துணை மருத்துவரை நியமிக்க வேண்டி இருந்திருக்கும். அதற்கு அதிக செலவு செய்திருக்க வேண்டும். ChatGPT-4.0 எனக்கு ஏற்படவிருந்த சுமார் ரூ.2 லட்சம் இழப்பதில் இருந்து என்னை காப்பாற்றியது.’ என அந்த நபர் மகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார்.
தொழில்நுட்பம் நமது நண்பன் என்பதை நிரூபிக்கும் ஒரு உன்னத உதாரணமாக இந்த சம்பவம் உள்ளது.