வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்து வருகிறேன். அவை இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது. இது நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் 25% கட்டணத்தை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனது அசெம்பிள் செயல்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ள டொனால்டு ட்ரம்ப் கடுமையாகக் கண்டிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும், அவர் ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்திருந்தார். “நீங்கள் இந்தியாவில் உற்பத்தி கட்டமைப்புகளை அமைப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். மாறாக, ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.