கலிபோர்னியா: உலகின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் மினிட்மேன்-3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
அமெரிக்கா கடந்த 1970-ம் ஆண்டே மினிட்மேன் ஏவுகணை திட்டத்தை கொண்டு வந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் படைத்தது. இந்நிலையில் மினிட்மேன்-3 ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று சோதனை செய்தது. இதில் ஆயுதம் இல்லை. இந்த ஏவுகணை மூலம், உலகின் எந்த பகுதி மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம்.
கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விண்வெளி தளத்திலிருந்து இந்த ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. இந்த ஏவுகணை மணிக்கு 15,000 மைல் வேகத்தில் பயணித்து, 4,200 கி.மீ தொலைவில் உள்ள மார்சல் தீவின் ரொனால்ட் ரீகன் ஏவுகணை பரிசோதனை மையத்துக்கு சென்றது. இந்த மார்சல் தீவு, மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள எரிமலைகள் அடங்கிய தீவுப் பகுதி. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க விமானப்படை கூறியிருப்பதாவது:
மினிட்மேன்-3 ஏவுகணை சோதனை அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதையும் காட்டுகிறது. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பானவை, நம்பகத்தன்மை வாய்ந்தவை, 21-ம் நூற்றாண்டு அச்சுறுத்தலை முறியடிக்க கூடியவை என்பதை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான பரிசோதனை. இதற்கு முன் இது போன்ற 300-க்கும் மேற்பட்ட சோதனைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இது உலகின் தற்போதை சம்பவங்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட சோதனை அல்ல.
மினிட்மேன் ஏவுகணைகளுக்கு மாற்றாக எல்ஜிஎம்-35ஏ என்ற ஏவுகணையை கொண்டு வர அமெரிக்க விமானப்படை திட்டமிட்டுள்ளது. அத்திட்டம் நிறைவேறும்வரை மினிட்மேன் ஏவுகணை பயன்படுத்தப்படும். இவ்வாறு அமெரிக்க விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.