மதுரை: கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கீழடி அகழாய்வுக்கு முதல் ஆண்டு நிதி ஒதுக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஏன் நிறுத்தப்பட்டது. ஆய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நிதியை நிறுத்துவது, எல்லாம் கிடைத்தபோது ஏன் நிறுத்தினீர்கள். நீங்கள் ஒதுக்கிய நிதி, நீங்கள் சொல்லிவரும் வரலாற்றுக்கு எதிரான உண்மையை கண்டறிந்ததால் பதற்றம் அடைந்து நிதியை நிறுத்தினீர்கள். வேத நாகரிகத்துக்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்ற உண்மையை உங்களால் ஏற்க முடியவில்லை.
நிதியை நிறுத்தி, ஆய்வை நிறுத்தி, ஆய்வறிக்கையை எழுதவிடாமல் இடையூறு செய்தீர்கள். இதையும் மீறி ஆய்வறிக்கை சமர்பித்த பிறகும் வெளியிடாமல் முடக்க நினைத்தீர்கள். நாடாளுமன்றத்தின் தலையீடு மூலம் வெளியிட முயற்சித்தால் இப்போது ‘போதிய நம்பகத்தன்மை இல்லை’ என சொல்லி நிறுத்துகிறீர்கள். இது மட்டுமின்றி இன்னும் எவ்வளவு இடையூறு செய்தாலும், கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு.
புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல. இம்மண்ணில் கட்டி எழுப்பப்பட்ட தமிழர்களின் தொல் நகரம். மூவாயிரத்து ஐநூறு ஆண்டுக்கு முந்தைய தமிழர்களின் தொல் தடங்கள். நீங்கள் நிதியை மறுப்பது, ஆய்வை நிறுத்துவதன் மூலமோ மறைந்துவிடாது. வெளிப்பட்டுவிட்ட வரலாற்று உண்மைகளுக்கு வெளிச்சம் கூடத்தான் செய்யும். அதுதான் அறிவியல்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.