தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்காதது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

சென்னை: “புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. இதனால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை,” என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ,‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், தாக்கல் செய்திருந்த மனுவில், “கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்தாண்டுக்கான சேர்க்கை இதுவரையிலும் தொடங்கவில்லை. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறி்த்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. இதனால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை. நாடு முழுவதும் பல மாநிலங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை” என்று வாதிட்டார்.

அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மையைக் காட்டுகிறது” என தெரிவித்தார்.

இதையடுத்து, 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.