புதுடெல்லி: இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (IMF) நியாயப்படுத்தியுள்ளது. இந்த கடன் தவணையைப் பெறுவதற்கு தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஎம்எப்-ன் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக், “பாகிஸ்தான் உண்மையில் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாக எங்கள் வாரியம் கண்டறிந்துள்ளது. அது சில சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால்தான், வாரியம் முன்னோக்கிச் சென்று நிதி வழங்கும் திட்டத்தை அங்கீகரித்தது.
இதற்கான முதல் மதிப்பாய்வு 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டது. மேலும் அந்தக் காலக்கெடுவுக்கு இணங்க, மார்ச் 25, 2025 அன்று, ஐஎம்எப் ஊழியர்களும், பாகிஸ்தான் அதிகாரிகளும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF)க்கான முதல் மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டினர். அது அந்த ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தம், பின்னர் எங்கள் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது மே 9 அன்று மதிப்பாய்வை நிறைவு செய்தது. இதன் காரணமாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் நிதியை பெற்றது” என்று அவர் மேலும் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தால் செப்டம்பர் 2024 இல் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் சுமார் 2.1 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடனான பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிதியளிக்க பணத்தைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா மீண்டும் ஐஎம்எப்-ஐ கேட்டுக் கொண்டது.
இதற்கிடையே, கடனைப் பெறுவதற்காக ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளில் நாடாளுமன்ற ஒப்புதல், இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் உள்பட பல விஷயங்கள் அடங்கும்.