கொல்கத்தா: உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து வெளிவர வங்கதேசத்துக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.நாராயணன், “இந்தியாவுக்கு மிகப் பெரிய வலிமை உள்ளது என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது. அதேநேரத்தில் அந்த வலிமை என்பது கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது ஒரு முக்கியமான செய்தி. நாம் ஒரு பொறுப்பான மற்றும் பெரிய சக்தி என்பதை நிரூபித்துள்ளோம்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவானவை. மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வங்கதேசம் விரும்புவதை நாம் வழங்க முடியும். அதற்கான வலிமை இந்தியாவுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். வங்கதேசத்தில் உள் பிரச்சினைகள் உள்ளன, அவற்றை அந்நாடு சமாளிக்க முடியும். அதில் இந்தியா உதவிக்கரம் நீட்ட முடியும் என்று நான் நினைக்கிறேன்.
நமக்கு வங்கதேசம் ஒரு முக்கியமான கூட்டாளி. அனைவருக்கும் அண்டை நாடுகளுடன் பிரச்சினைகள் உள்ளன. இந்தியா போன்ற பெரிய நாடுகள் பெரிய அளவில் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும். இந்தியாவும் வங்கதேசமும் நட்பற்றதாக இருப்பதை நான் பார்க்கவில்லை. நாம் மிகவும் நெருங்கிய நண்பர்களாகவும், நல்ல அண்டை நாடுகளாகவும் இருக்க முடியும். மற்ற நாடுகள் தலையிட அனுமதிக்கக் கூடாது.
வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இன்று வங்கதேசத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. வங்கதேசத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியாததால் அவர் (முகமது யூனுஸ்) விரக்தியடைந்துள்ளார் என்று நினைக்கிறேன்.
இந்தியாவும் வங்கதேசமும் நண்பர்களாக இருக்க வேண்டும். வெறும் நண்பர்களாக அல்ல, மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், முன்பு இருந்த நிலைமைக்கு மீண்டும் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். வங்கதேசத்தில் நடப்பது என்ன? – வாசிக்க > தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் – வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!