கோபன்ஹேகன்,
நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் கடந்த 19-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மந்திரியின் இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்வார். இதுதவிர, உலகளாவிய மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில் பரஸ்பர நலன்களை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் ஒரு பகுதியாக இந்த 3 நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தின. இந்த 3 நாடுகளுடனும் இந்தியா இனிமையான மற்றும் நட்பு முறையிலான உறவை கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பஹல்காம் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறும்போது, தீவிரமடைந்த பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினேன் என தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், 3-ம் நாட்டின் தலையீடு இல்லை என மத்திய அரசு தொடக்கத்தில் இருந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலியில், டென்மார்க் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் கோபன்ஹேகன் நகரில், அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, உலகளவில் உள்ள பெரிய சவால்கள் என நாம் பார்க்கும்போது, முக்கிய சவால்களில் ஒன்றாக பயங்கவராத செயல்களை நான் முன்வைப்பேன். அது ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை குறிப்பிட்டு பேசும்போது, அண்டை நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்பட்ட பயங்கரவாதிகள், அந்நாட்டின் அதிக பாதுகாப்புக்கான ஆதரவுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், சில நாட்களாக அவர்களுடன் நாங்கள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த மோதலை ஒப்பந்தம் மூலம் ராணுவ வடிவில் முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம். துப்பாக்கி சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என ஒப்பந்தம் மற்றும் புரிதல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் ராணுவங்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காணப்பட்டது.
நாங்கள் பாகிஸ்தானை 10-ந்தேதி கடுமையாக தாக்கியதன் எதிரொலியாக, அவர்கள் துப்பாக்கி சூட்டை நிறுத்த தயாராக உள்ளோம் என தெரிவித்தனர். இதனை எதிர்கொள்வதற்காக அவர்கள் ஒப்பந்தத்திற்கு முன் வந்தனர் என கூறியுள்ளார்.
இதனால், நான்தான் மத்தியஸ்தம் செய்து வைத்தேன் என்ற வகையில் டிரம்ப் தொடர்ந்து பேசி வருவதற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போரில் ரஷியா ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், ரஷியாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தபோதும், ரஷியாவிடம் இருந்து இன்னும் எரிபொருளை வாங்கி கொண்டுதான் இருக்கின்றன.
அது போன்றுதான் இந்தியாவும் வாங்குகிறது. அந்நாடுகள் எரிபொருள் விலையை அதிகரிக்க செய்கின்றன. இது இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.