புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா நேற்று தனது கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகளை வழங்கினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா இன்று (மே 24) பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கடந்த புதன்கிழமை பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதேநாளில் மும்பையில் அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலமானார்.
இதையடுத்து மும்பை சென்ற ஓகா, நேற்று முன்தினம் தனது தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். இந்நிலையில் அவர் நேற்று பணிக்கு திரும்பினார். அவர் தனது கடைசி பணி நாளில் தனது வழக்கமாக அமர்வில் இடம்பெற்று 11 தீர்ப்புகளை வழங்கினார்.
பிரிவு உபசார விழாவில் அவர் பேசுகையில், “ஓய்வு பெறும் நீதிபதி ஒருவர் கடைசி பணி நாளில் வேலை செய்யக்கூடாது என்ற மரபை நான் ஏற்கவில்லை. கடைசி பணி நாளில் வழக்கமான அமர்வில் இடம்பெற்று சில தீர்ப்புகளை வழங்குவேன்” என்றார்.
ஓகா, 1960-ம் ஆண்டு மே 25-ம் தேதி பிறந்தார். மும்பை பல்கலைக்கழக பட்டதாரியான இவர் 1985-ல் பயிற்சி வழக்கறிஞராக சட்டப் பணியை தொடங்கினார். 2003-ல் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2005-ல் நிரந்தர நீதிபதியாகவும் பணியமர்த்தப்பட்டார். 2019-ல் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பிறகு 2021-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.