பெங்களூரு: மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மக்கள் அமைதியாக இருந்து தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, மக்கள் பீதி அடைவார்கள் என்பதால், அனைவரும் பீதி அடைய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கோவிட்-19 பாதிப்பின் தீவிரத்தை மிகைப்படுத்த வேண்டாம் என்றும், நிலைமையின் துல்லியமான விவரத்தை வழங்குமாறும் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்த விவகாரத்தில் மாநில அரசு விழிப்புடன் இருக்கிறது. கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். மாநிலத்தில் தற்போதுள்ள கண்காணிப்பு போதுமானது, சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை. அதுபோல கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் மாநிலத்தில் இல்லை. எனவே மக்கள் சுதந்திரமாக நடமாடலாம். மக்கள் தங்கள் வாழ்க்கையை சாதாரணமாக நடத்தலாம்.
சமீபத்திய கரோனா பாதிப்பு ஜேஎன்1-ன் துணை மாறுபாடாக இருக்கலாம். இவை சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்டன. ஆனால் அந்த நாடுகளிலும் பதற்றம் இல்லை.” என்று அவர் கூறினார்.
இன்று கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், பெங்களூருவில் 32 பேர் உட்பட மாநிலத்தில் 35 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.