லக்னோ,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூருவை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின்போது மெதுவாக பந்து வீசியதாக இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்சுக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெங்களூரு கேப்டன் ரஜத் படிதாருக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட்டபோதும் அந்த அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் படிதார் என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கும் தலா 6 லட்ச ரூபாய் அல்லது ஆட்டத்திற்கான ஊதியத்தில் 25 சதவீதம் இதில் எந்த தொகை மிகக்குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.