மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல: பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல.

ஒவ்வொரு இந்தியனின் இலக்கும் வளர்ச்சியடைந்த பாரதம்தான். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடையும் போது, ​​பாரதம் வளர்ச்சியடைந்தது ஆகும். இதுவே அதன் 140 கோடி மக்களின் விருப்பமாகும்” என்று கூறினார்

நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தின் கருப்பொருளாக ‘விக்ஸித்(வளர்ச்சியடைந்த) பாரதத்திற்கான விக்ஸித் ராஜ்யம்@2047’ இருந்தது. நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த கவுன்சில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியது. பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் பெரிய கூட்டம் இதுவாகும். பொதுவாக, நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். கடந்த ஆண்டு, இது ஜூலை 27 அன்று நடைபெற்றது. கவுன்சிலின் முதல் கூட்டம் பிப்ரவரி 8, 2015 அன்று நடந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.