தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ஜெய்ப்பூரில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி மீண்டும் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் அக்சர் படேல் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக பாப் டூப்ளிசிஸ் கேப்டனாக பொறுப்பேற்றார். ஏற்கனவே பிளே ஆப் ரேஸில் இருந்து டெல்லி அணி வெளியேறிய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த வெற்றி கட்டாயம் தேவைப்பட்டது. ஏனெனில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை படிக்க இந்த வெற்றி அவர்களுக்கு தேவை.
பஞ்சாப் பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரியான்ஷ் ஆர்யா 6 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 28 ரன்களும், ஜாஸ் இங்கிலீஷ் 32 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி நல்ல ஒரு ஸ்கோரை எட்டியது. கடைசியில் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 16 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 44 ரன்கள் அடித்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. டெல்லி அணி தரப்பில் முஸ்தாபிஸூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
pic.twitter.com/cJYFMtmQPa
— Punjab Kings (@PunjabKingsIPL) May 24, 2025
டெல்லி பேட்டிங்
சிறிது கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய டெல்லி அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தது. கேஎல் ராகுல் 35 ரன்களும், பாப் டூப்ளிசிஸ் 23 ரன்களும் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய கருண் நாயர் 27 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். செடிகுல்லா அடல் தனது முதல் போட்டியிலேயே 16 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் போட்டி பஞ்சாப் பக்கம் திரும்ப தனி ஒருவராக போட்டியை தன் பக்கம் மாற்றினார் சமீர் ரிஸ்வி. தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்த சமீர் ரிஸ்வி சிறப்பாக பேட்டிங் செய்தார். 25 பந்துகளில் 58 ரன்கள் அடித்த சமீர் ரிஸ்வி டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 19.3 ஓவரில் 208 ரன்கள் அடித்து டெல்லி அணியை வெற்றி பெற செய்துள்ளார்.