புதுடெல்லி: யங் இந்தியா நிறுவனத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ரூ.3 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளனர் என்று நேஷனல் ஹெரால்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1937-ம் ஆண்டு நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னஸ்ல் லிமிடெட் நிறுவனம் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இந்த பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டில் மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.50 லட்சத்தை மட்டும் செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. எஞ்சிய ரூ.89.50 கோடி கடனை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.
இதுதொடர்பான வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த குற்றப் பத்திரிகையில் ஏஜேஎல் மற்றும் யங் இந்தியா நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தனது அறக்கட்டளை சார்பில் ரூ.2.25 கோடியை யங் இந்தியா நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார்.
இதேபோல தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அறிவுறுத்தலின்பேரில் யங் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து ரூ.3 கோடிக்கும் அதிகமாக நன்கொடைகளை வழங்கி உள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்குமார் பன்சால், மறைந்த தலைவர் அமகது படேல் உள்ளிட்டோர் ஏஜேஎல் மற்றும் யங் இந்தியா நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி உள்ளனர்.
அகமது படேலின் வலியுறுத்தலால் யங் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அரவிந்த் விஸ்வநாத் சிங் சவுகான் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் யங் இந்தியா நிறுவனத்துக்கு சில லட்சங்கள் முதல் பல கோடிகள் வரை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இந்த நன்கொடைகள் தொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.