Mohammed Shami: ஜூன் 20 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு புதிய கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக இருப்பார். பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தார். ஆச்சரியமாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஏன் அவர் தேர்வு செய்யபடவில்லை என்பதை இங்கே பார்க்கலாம்.
முகமது ஷமி கடைசி போட்டி
34 வயதான ஷமி 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார். இங்கிலாந்தில் நடைபெற்ற அப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2023 உலகக் கோப்பையில், இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதில் இந்தியா இறுதிப்போட்டியில் தோற்றிருந்தது. பின்னர் காயம் காரணமாக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்திய அணிக்காக ஆடினார். இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
பிசிசிஐ சொல்லும் முக்கிய காரணம்
முதல் காரணம், பிசிசிஐ மருத்துவக் குழு முகமது ஷமி டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற உடல்தகுதியை பெறவில்லை என்று தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளது. ESPN Cricinfo அறிக்கையின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஷமியின் உடற்தகுதியை மதிப்பிடுவதற்காக BCCI-யின் மருத்துவக்குழு லக்னோவுக்குச் சென்றனர். இந்தியா ஏ அணியில் சேர்ப்பதற்காக இந்த மதிப்பீடு நடத்தப்பட்டது. ஆனால், அவர் முழு உடல் தகுதியை பெறவில்லை என்பதை மருத்துவக்குழு உறுதி செய்தது. ஷமியால் இப்போது நீண்ட ஸ்பெல்கள் பந்துவீச முடியாது என மருத்துவக்குழு தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஷமி தேர்வு செய்யப்படாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், காயம் காரணமாக அவர் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதும் ஆகும். 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்திய அணியிலிருந்து விலகி இருந்தார். ஷமிக்கு கணுக்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் ஐபிஎல் 2025 தொடருக்கு மீண்டும் வந்தாலும், ஐபிஎல்லில் அவரது பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. சில போட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இதனை பிசிசிஐ தேர்வுக்குழு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
மூன்றாவது காரணம், இந்திய அணி தேர்வாளர்கள் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமான டெஸ்ட் தொடர்கள் வர இருப்பதால் ஷமிக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷமியின் டெஸ்ட் ரெக்கார்டு
2014, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா இங்கிலாந்துக்கு மேற்கொண்ட கடைசி மூன்று டெஸ்ட் சுற்றுப்பயணங்களிலும் இந்திய அணியில் ஷமி இருந்தார். 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் அவர் 5 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி, 14 போட்டிகளில் 40.50 சராசரியுடன் 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தமாக, முகமது ஷமி 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நல்ல ரெக்கார்டு வைத்திருந்தும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.