'அன்னாபெல்' பேய் பொம்மை மாயமாகிவிட்டதா? அச்சத்தில் உள்ளூர் மக்கள்

வாஷிங்டன்,

அமெரிக்க எழுத்தாளர் ஜானி குருயெல், கடந்த 1915-ம் ஆண்டு ‘ராகெடி ஆன்’ என்ற பொம்மை கதாபாத்திரத்தை உருவாக்கினார். தொடர்ந்து 1918-ம் ஆண்டு அவர் எழுதிய ‘ராகெடி ஆன் ஸ்டோரீஸ்’ என்ற புத்தகத்துடன் ‘ராகெடி ஆன்’ பொம்மை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது.

கந்தல் துணிகளால் செய்யப்பட்ட அந்த பொம்மை, சிவப்பு நிற தலைமுடி, முக்கோண வடிவிலான மூக்கு மற்றும் பட்டன்களால் செய்யப்பட்ட கண்களை கொண்டிருந்தது. அந்த பொம்மை குழந்தைகளை மிகவும் கவர்ந்த நிலையில், ‘ராகெடி ஆன்’ பொம்மையின் விற்பனை சூடுபிடித்தது.

இந்த நிலையில், 1970-களில் ‘அன்னாபெல்’ என பெயரிடப்பட்ட ‘ராகெடி ஆன்’ பொம்மை ஒன்று பிரபலமடைய தொடங்கியது. பேய் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து வந்த எட் மற்றும் லொரெய்ன் வாரன் தம்பதி, அந்த பொம்மையை ஒரு நர்சிங் மாணவியிடம் இருந்து பெற்றதாகவும், அந்த பொம்மைக்குள் ‘அன்னாபெல்’ என்ற சிறுமியின் ஆவி இருப்பதாகவும் கூறினர்.

பின்னர் அந்த பொம்மையை தங்களுடைய அமானுஷ்ய பொருட்களுக்கான அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் அவர்கள் வைத்திருந்தனர். இந்த பொம்மையை பற்றிய அமானுஷ்ய கதைகள் மக்களிடையே வேகமாக பரவ தொடங்கிய நிலையில், இதை வைத்து ஹாலிவுட் திரையுலகில் ‘அன்னாபெல்’, ‘தி கான்ஜூரிங்’ உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டன. இந்த படங்களுக்கென்று உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில், கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ‘வாரன்ஸ் அக்கல்ட்’ அருங்காட்சியம் சார்பில் ‘அன்னாபெல்’ பொம்மையை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி சமீபத்தில் லூசியானா மாகாணத்தில் ‘அன்னாபெல்’ பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில்தான் லூசியானாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நோட்டாவே ரிசார்ட்டில் மோசமான தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் சமூக வலைதளங்களில் பலர் ‘அன்னாபெல்’ பேய் பொம்மையை லூசியானாவிற்கு கொண்டு வந்ததே இந்த தீ விபத்திற்கு காரணம் என்று கருத்து பதிவிடத் தொடங்கினர். இருப்பினும் இந்த கருத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘அன்னாபெல்’ பொம்மை திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியது. இதனால் லூசியானாவைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில், “என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை”, “பேய் பொம்மையை எதற்காக நாடு முழுவதும் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள்?” என்பது போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ‘அன்னாபெல்’ பொம்மை உண்மையிலேயே மாயமாகிவிட்டதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் ‘அன்னாபெல்’ பொம்மையை காட்டி, “அன்னாபெல் பத்திரமாக இருக்கிறாள். அவள் எங்கும் செல்லவில்லை. அவள் வரும் அக்டோபர் 4-ந்தேதி இலினாய்ஸ் மாகாணத்திற்கு வர இருக்கிறாள். அவளை நேரில் காண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ‘அன்னாபெல்’ பொம்மை காணாமல் போகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதே சமயம், டிக்கெட் விற்பனையை அதிகரிப்பதற்காக ‘அன்னாபெல்’ பொம்மையை பற்றி இது போன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.